மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரு நாட்களும் பல்வேறு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சேர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளுள் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. இது தனது வாடிக்கையாளர்களுக்கான மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊழியர்களின் கூட்டமைப்புகள் சேர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், இவ்விரு நாட்களும் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, இந்த இரு நாட்களும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற இருப்பதால், அன்றைய நாட்களில் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம். இதனால் அந்நாட்களில் வாடிக்கையாளர்களுக்கான சேவைகள் சரியாக நடக்க தேவையான நடவடிக்கைகளை வங்கிகளிலும் மற்றும் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்படும். இருப்பினும் குறிப்பிட்ட அளவு பாதிப்பு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
இப்போராட்டமானது இந்திய பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து நடைபெறுகிறது. மேலும் இப்போராட்டத்தில் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, மேலும் அனைத்திந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு சார்பாக நடத்தபட உள்ளது. இப்போராட்டமானது நீண்டகாலமாகவே நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த நிலைமை வங்கிகளுக்கு மட்டும் அல்ல, விமானம், இன்சூரன்ஸ் போன்ற அரசு நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக பங்கு விற்பனை மூலமாக, மத்திய அரசு தனியார் மயமாக்கி வருகிறது. இதனால் அங்கு வேலை பார்க்கின்ற ஊழியர்களின் நிலையானது, மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. எனவே இந்த தனியார்மயமாக்குதலை எதிர்த்து போராட்டங்கள் தொடர்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.