வங்கிக்கு சென்று கொண்டிருந்த பெண் மர்ம நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தையுடன் ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் புக்ஸர் என்ற மாவட்டத்தில் உள்ள ஒசாகா பரான் என்ற கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது ஐந்து வயது குழந்தையுடன் பக்கத்து கிராமத்தில் இருக்கும் வங்கிக்கு நேற்று நடந்து சென்றுள்ளார். அப்போது அவர்கள் எதிரே வந்த மர்ம கும்பல் அந்தப் பெண்ணையும் அவரின் ஐந்து வயது குழந்தையும் கடத்திச் சென்றனர்.அதுமட்டுமன்றி கடத்திச் சென்று அந்தப் பெண்ணை அந்த மர்ம கும்பல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளது.
அந்த பாதிக்கப்பட்ட பெண் நடந்த சம்பவத்தை வெளியே சொல்லி விடக் கூடாது என்று கருதிய அந்த கொடூர கும்பல் அந்தப் பெண்ணையும் அவரின் ஐந்து வயது குழந்தையையும் சேர்த்து கை கால்களை கட்டியுள்ளனர். அதன்பிறகு அப்பகுதியில் இருந்த ஆற்றில் அவர்களை தூக்கி வீசினர்.அப்போது அந்தப் பெண் அலறியதால் அப்பகுதியில் இருந்த மக்கள் அந்தப் பெண்ணை ஆற்றில் இருந்து மீட்டனர். ஆனால் அவரின் ஐந்து வயது குழந்தை ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.படு காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.