அரசு பொதுத்துறை வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து நகை மற்றும் பணத்தை திருட முயன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்கு ரத வீதியில் அரசு பொதுத்துறை வங்கி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று வங்கி ஊழியர்கள் வேலையை முடித்துவிட்டு வழக்கம்போல வங்கியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் வங்கி பூட்டியே இருந்துள்ளது. இதனைதொடர்ந்து நேற்று திங்கள்கிழமை என்பதால் வங்கி ஊழியர்கள் வழக்கம்போல பணிக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் வங்கியை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக திருச்செங்கோடு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி கைரேகை நிபுணர்களையும் வரவழைத்து தடயங்களை சேகரித்துள்ளனர். இந்நிலையில் திருட வந்த மர்மநபர்கள் பணம் வைக்கபட்டிருந்த பாதுகாப்பு அறையை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அந்த அறையை உடைக்க முடியாததால் உள்ளே இருந்த 30கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகை தப்பியுள்ளது. மேலும் வங்கியில் உள்ள மின்விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகளை துண்டித்ததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கி மேலாளர் லோகியா அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வங்கியில் திருட முயற்சி செய்த மர்மநபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.