தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் மர்ம நபர்களின் செயல் அதிகரித்து வருகிறது. மேலும் தான் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவது தற்போது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இப்போது சென்னையில் வங்கி மண்டல மேலாளர் ஒருவர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து தங்கநகைகளை கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது. அதாவது
சென்னை அரும்பாக்கம் ராசாக்கார்டன் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நகைக் கடன் வங்கி இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றிய மண்டல மேலாளர் முருகன் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து சென்ற சில வாரங்களுக்கு முன் 31.7 கிலோ தங்கநகைகளை கொள்ளையடித்தார். இவ்வழக்கில் முருகன், அவரது கூட்டாளிகள் மற்றும் இன்ஸ்பெக்டர் என 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து காவல்துறையினர் முருகன், சூர்யா, செந்தில்குமரன் ஆகிய 3 பேரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அதில், அம்பத்தூர், பாடி குப்பம் பகுதியில் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வந்த முருகன் அரும்பாக்கத்துள்ள நகைக்கடன் வங்கியில் மண்டலம் மேலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையில் முருகன் போதிய பணம் இல்லாததால் உடற்பயிற்சி கூடத்தை மூடி விட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் வங்கியில் நகைகளை எப்படி கொள்ளையடிக்கலாம் என தனது நண்பர்கள் சந்தோஷ், செந்தில்குமாரன், பாலாஜி போன்றோருடன் ஒரு மாதமாக சதித்திட்டம் தீட்டி இருக்கிறார்.
வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உருக்கி பணமாக பெற்ற பிறகு கூட்டாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய்.50 லட்சம் பணம் தருவதாக பேசியதாகவும், இதனால் கூட்டாளிகள் 2 கார்கள் மற்றும் 3 மோட்டார்சைக்கிள்கள் கொடுத்து வங்கியில் நகைகளை கொள்ளையடித்து தப்பி செல்வதற்கு துணையாக இருந்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து முருகனிடமிருந்து ஒரு மோட்டார்சைக்கிள், கத்தியை காவல்துறையினர் பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை முடிந்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.