திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வங்கி ஊழியர் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் வங்கி மற்றும் ஏ.டி.எம். மையம் ஆகியவை மூடப்பட்டது.
திண்டுக்கல்லில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரு தெருவில் அல்லது ஒரு வீட்டில் கொரோனா வைரஸால் 3-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டால் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தகரத்தால் மூடி ஊரக வளர்ச்சித்துறையினரும், சுகாதாரத் துறையினரும் “சீல்” வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் 22 இடங்கள் தகரத்தால் மூடி “சீல்” வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழனி ரோட்டில் வாணிவிலாஸ் சிக்னல் அருகே இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வங்கி அருகே உள்ள ஏ.டி.எம். மையம் மற்றும் வங்கி ஆகியவை மூடப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறையினர் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். மேலும் கொரோனா குறித்து அப்பகுதி மக்களிடையே அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.