கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு சாஸ்திரி நகரில் தனியாருக்கு சொந்தமான சோலார் பல்புகள் மற்றும் டயர்கள் விற்பனை செய்யும் நிறுவனம் அமைந்துள்ளது. இதன் மற்றொரு கிளை பெங்களூருவில் இருக்கிறது. அங்குள்ள மேலாளரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் தன்னை ராணுவ அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். இதனையடுத்து சோலார் பல்புகள், அதன் விலை விவரங்கள் தெரிய வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதனால் அந்த நிறுவனத்தினர் அவரின் செல்போன் எண்ணிற்கு விவரங்களை அனுப்பி வைத்தனர். மீண்டும் அவர்களை தொடர்பு கொண்ட நபர் பல லட்ச ரூபாய் மதிப்பில் பொருட்கள் வேண்டும். அதற்கான பணத்தை உங்கள் நிறுவன ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்துகிறேன் எனக் கூறியுள்ளார்.
எனவே ஊழியர்களின் வங்கி கணக்கில் இருந்து 1 ரூபாய் அனுப்புமாறு கூறியுள்ளார். இதனை நம்பி அந்த நிறுவனத்தினர் கோவை மற்றும் பெங்களூரு கிளை ஊழியர்கள் சிலரின் வங்கி கணக்கில் இருந்து 1 ரூபாயை அனுப்பியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் ஊழியர்களின் வங்கி கணக்கில் இருந்து 11 லட்சத்து 42 ஆயிரத்து 235 ரூபாய் பணத்தை மர்ம நபர் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து கோவை பீளமேடு கிளை நிர்வாக மேலாளர் சுனிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.