தொழிலாளியின் வங்கி கணக்கில் இருந்து காணாமல் போன பணத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததால், ஆன்லைனில் பொதுமக்கள் பல்வேறு விதமான வேலையை வீட்டில் இருந்தபடியே முடித்துக் கொள்கின்றனர். அதோடு ஆன்லைன் பண பரிவர்த்தனைகளையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இப்படி மக்களிடம் இணையதள பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக ஆன்லைன் மோசடிகளும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆன்லைன் மோசடி தொடர்பான பல்வேறு செய்திகள் சமீப காலமாகவே வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த பாண்டிவேல் என்பவரின் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது.
அதில் உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை உண்மை என நம்பிய பாண்டி வேல் அந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். அவர் லிங்கை கிளிக் செய்த அடுத்த நொடியே அவருடைய வங்கி கணக்கில் இருந்த 12 ஆயிரம் பணம் மாயமாகிவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டி வேல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பணத்தை அபேஸ் செய்திருப்பது தெரிய வந்தது. இந்த பணத்தை காவல்துறையினர் மீட்டனர். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பாண்டி வேலிடம் மீட்கப்பட்ட பணத்தை ஒப்படைத்தார்.