முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் நீதிமன்றத்தில் குற்ற ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் லஞ்சம் ஒழிப்பு துறை எஸ்பி பொன்னி தலைமையில் விசாரணை குழுவை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்ற ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது.