கேரள மாநிலம் தலையோலப்பரம்பு பகுதியில் மேத்யூ, சூசாம்சா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சோனா என்ற மகள் இருக்கின்றார். இவர் திருமணமாகி பெரம்பலூரில் கணவருடன் வசித்து வருகிறார். இதையடுத்து வீட்டில் வயதான பெற்றோர் இருப்பதால் அவர்களைக் கவனித்துக் கொள்வதற்காக வீட்டைச் சுற்றி சோனா கேமராக்களை வைத்துள்ளார்.
இதன் வழியாகத் தனது பெற்றோரை சோனா கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மொட்டை மாடியில் நைட்டி அணிந்து ஒரு ஆண் நிற்பதை தனது செல்போன் மூலம் சோனா கவனித்துள்ளார். அதன்பின் இது தொடர்பாக சோனா காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் மொட்டை மாடியில் மறைந்திருந்த நைட்டி திருடனை பிடித்தனர்.
அதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த ராபின்சன் என்பது தெரியவந்தது. மேலும் இவர் தனியாக இருக்கும் வயதில் முதியவர்கள் வீட்டை குறிவைத்து நைட்டி அணிந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து வருவது தெரியவந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.