இந்த வருடம் வட கிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் இதை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கு 2048 பேரிடர்மீட்பு வீரர்கள் தயாராக இருக்கின்றனர் மற்றும் புயலை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயாராக இருக்கிறது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்து இருக்கிறார். நேற்று சென்னை எழிலகத்திலுள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில், வட கிழக்கு பருவமழை பற்றி எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
இதையடுத்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது “வருகிற பருவ மழையை எதிர்கொள்ள தமிழக முதல்வர் சென்ற 26ம் தேதி அரசு உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வருடம் வட கிழக்கு 35 -75 % வரை அதிகமாக பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்பின் மத்திய -மாநில பேரிடர் மீட்பு படையின் சார்பாக 2048 வீரர்கள் தயார்நிலையில் இருக்கின்றனர். இவற்றில் 799 பேர் தமிழகம் சார்பாகவும், 1249 பேர் மத்திய அரசு சார்பிலும் தயராக இருக்கின்றனர். அரசு அனைத்து வகையிலும் தயார் நிலையில் இருக்கிறது. அத்துடன் 121 பல் நோக்கு மையங்கள் தயார் நிலையில் இருக்கிறது.
மேலும் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சராசரி மழையைவிட அதிக மழைபெய்யும் என தகவல் வெளிவருகிறது. புயல் பற்றி இதுவரையிலும் எந்த தகவலும் இல்லை. எனினும் புயல் வந்தாலும் எதிர்நோக்குவதற்கு அரசு தயாராக இருக்கிறது. இதனிடையில் சென்னை மாநில கட்டுப்பாட்டுமையம் எண் 1070, மாவட்ட அளவிலான எண் 1077 கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரம் 131 இடங்களில் பாதுகாப்பு மையங்கள் தயார்நிலையில் இருக்கிறது. இடப் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் தேவைக்கேற்றவாறு பாதுகாப்பான பகுதியிலுள்ள தனியார் கல்யாண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தபடும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கண்காணிக்க, பேரிடர் மேலாண்மைக்கு என அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையம் இருக்கிறது. தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறும் தகவல்கள் அடிப்படையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு அரசுக்கு என பிரத்யேகமாக வானிலை முன் அறிவிப்புங்களை வழங்க கடந்த நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுதும் 100 தானியங்கி வானிலை மையம், 1400 தானியங்கி மழை மானி பொறுத்துவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.