தமிழகத்தில் வடகிழக்கு பருவநிலை தொடங்கியுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்டங்களில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் பருவங்களை எதிர்கொள்ள அனைத்து அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும். மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களை மீட்டு முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பை முன்னதாக தருவதை உறுதி செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க பலவேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொலைபேசி, whatsapp மூலம் வரக்கூடிய புகார்களை உடனடியாக சரி செய்ய வேண்டும். பழுதடைந்த பலவீனமான சுற்றுச்சுவர்களை கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் வெள்ளம் ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டியது மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு. மழைக்காலம் சவாலான காலம் அது மக்களுடன் இணைந்து எதிர் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.