Categories
மாநில செய்திகள்

வடசென்னையில் பெய்த கனமழை…. நிலக்கரி கிடங்கில் மழைநீர் தேக்கம்…..மின்சாரத்துறை அமைச்சர் ஆய்வு….!!

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த கனமழையின் காரணமாக வட சென்னை அனல்மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி சேமிப்பு கிடங்கில் மழைநீர் தேங்கி மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி இருப்பு மற்றும் மின் உற்பத்தி குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு பருவ மழையால் மின் உற்பத்தி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது அனல் மின் நிலகிரி கிடங்கில் மழைநீர் தேங்கி உள்ளதால் 400 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நீலகிரி கிடங்கில் தேங்கியுள்ள மழை நீரை போர்கால அடிப்படையில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் வடசென்னை அனல்மின் நிலையத்தில் பாதிக்கும் மின் உற்பத்தி அளவை தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்து தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 4,000 மின் பொறியாளர்கள் மற்றும் 30,000 பணியாளர்கள் என்று 40,000 ஊழியர்கள் மழைக்கால பாதிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மழைக்காலங்களில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தால் அவற்றை உடனடியாக சரி செய்ய கூடிய வகையில் 1,32,000 மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் வடகிழக்கு பருவ காலத்திற்கு முன்னதாகவே பழுதடைந்த 25,500 மின்கம்பங்கள் சரிபார்க்கப்பட்டது. மேலும் கடந்த ஆட்சியில் மழைகாலத்தில் மின்வினியோகம் பல நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனே சீரமைத்து மீண்டும் மின் விநியோகம் செய்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

Categories

Tech |