வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக தேதியை அமைச்சர் பிகே சேகர்பாபு தெரிவித்துள்ளார்கள். இது முருக பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, வடபழனி முருகர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி நடைபெற்று வருகின்றது, இதனை நேற்று மாலை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் மிக பழமை வாய்ந்த கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு 2019ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்கவேண்டும். ஆனால் நடைபெறவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கோவிலின் திருப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு உள்ளது.
தமிழக முதல்வர் அவர்களின் ஆலோசனைப்படி கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கோவில்களின் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பணிகள் அனைத்தும் முடிவு பெற்று கோயில் கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையில் உள்ளதால் ஜனவரி 23ஆம் தேதி அன்று குடமுழுக்கு நடத்த தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை தமிழக முதல்வர் அவர்கள் சார்பாக நான் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் குடமுழுக்கு முடிவடைந்ததும் காலனி பாதுகாப்பு இடம், திருமண ஜோடிகள் உடைமாற்றும் அறை உள்ளிட்டவை 13 கோடி செலவில் கட்டப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.