வீதி உலா வந்தபோது தேர் சாய்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பழனியூர் மகா காளியம்மன் கோவிலில் கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில் அம்மன் புலி, யானை, சிங்கம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த 9-ஆம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் தேர் வடம் பிடித்து இழுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் குண்டம் பூ வளர்க்கும் பணி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீற்றியிருக்க தேர் வீதி உலா வந்தது. இதனை அடுத்து பக்தர்கள் சந்தைப்பேட்டை பகுதியில் தேரை இழுத்து வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த தேர் வேகமாக ஓடி சாக்கடை கால்வாயில் இறங்கி ஒரு புறமாக சாய்ந்துவிட்டது. இந்த சம்பவத்தில் பக்தர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொக்லைன் எந்திரம் மூலம் தேரை மீட்டு நிறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.