பரமக்குடியில் 13 ஊரணிகளை காணவில்லை என்று மதிமுகவை சேர்ந்த வார்டு கவுன்சிலர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமநாதபுரம் பரமக்குடி நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 21 இடங்களிலும், அதிமுக 10 இடங்களிலும், பாஜக இரண்டு இடங்களிலும், மற்றவை மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றது. நகர்மன்றத் தலைவராக சேது கருணாநிதி பொறுப்பேற்றுக்கொண்டார். துணைத்தலைவராக குணா பதவி ஏற்று கொண்டார். இந்நிலையில் பரமக்குடி நகராட்சி நகர்மன்ற கூட்டம் இன்று காலையில் 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் சேதுகருணாநிதி தலைமையில் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கழிவுநீர் வடிகால் சுத்தம் செய்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய 22வது வார்டு கவுன்சிலர் பாக்கியம் பரமக்குடி நகராட்சியில் 13 ஊரணிகளை காணவில்லை என்று தெரிவித்துள்ளார். வடிவேலு பாணியில் நமது ஊரிலேயே ஊரணிகள் காணவில்லை. இது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம். காணாமல் போன ஊரணிகளை மீட்டெடுக்க நகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த சேது கருணாநிதி 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது 11 மணிக்கு கூட்டத்திற்கு வந்தவர்கள் எல்லாம் கேள்வி எழுப்பக்கூடாது என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.