பெண்ணிடம் இருந்து 11 3/4 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் ரேணுகாதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் வசிக்கும் பாலகுமார், பிரியதர்ஷினி, சந்திரன் ஞான செல்வி, ரமேஷ் ஆகியோர் இணைந்து வங்கியில் வட்டியில்லா கடன் வாங்கி தருவதாக என்னிடம் கூறினர். அதனை நம்பி பல்வேறு தவணைகளாக 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அவர்களிடம் கொடுத்தேன். ஆனால் கூறியபடி அவர்கள் வங்கியில் கடன் வாங்கி தரவில்லை. எனவே மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரேணுகாதேவி அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.