5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் போலியான ஓட்டுரிமை அளித்து, வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாக திமுக வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய வளாகத்தில் பேசிய திமுக வழக்கறிஞர், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் போலியாக ஓட்டுரிமை அளிக்கப்பட்டதாக கூறினார். இரண்டு மாவட்டங்களிலும் நேற்று முதல் கட்டமாக வாக்களிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஒன்பதாம் நாளன்று நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலை திமுக வழக்கறிஞர் குழு ஆராய்ந்த பொழுது, காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், காட்டாங்குளத்தூர் ஒன்றியங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அதிமுக ஆட்சியில் முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.