Categories
மாநில செய்திகள்

வணிக நோக்கத்திற்காக கையகப்படுத்தினால்…. “நில உரிமையாளர்களுக்கு லாபத்தில் பங்கு தரலாம்”…. தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை..!!

வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்த புதிய சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ள மாநில தகவல் ஆணையம், நில உரிமையாளர்கள் லாபத்தில் குறிப்பிட்ட தொகையை பெறும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள வல்லம் கிராமத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்காக கடந்த 1997 மற்றும் 99 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு 2016 ஆம் ஆண்டு சொற்பத் தொகை மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிப்காட் சிறப்பு தாசில்தாரிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வசந்த கங்காதரன் உள்ளிட்ட நில உரிமையாளர்கள் தகவல் கேட்டிருந்தனர்..

உரிய தகவல் வராததால் சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு தாசில்தார் தரப்பில் கையகப்படுத்தபட்டற்கான தொகை மாவட்ட கருவூலத்தில் உள்ளதாகவும், அது காலாவதி ஆகிவிட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் பிறப்பித்த உத்தரவில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சாலைகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிற்காக நிலத்தை கையகப்படுத்தும் போது நில உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முழு இழப்பீடு தொகையும் அரசு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் தொழில் பேட்டைகள் போன்ற வணிக நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் போது  உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்..

வணிக பயன்பாட்டிற்காக நிலம் கையகப்படுத்தும்போது, நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டை முழுமையாக தந்து விட்டால் பணத்தை கையாளுவது தொடர்பாக அவர்களுக்கு தெரியாமல் அந்த தொகையை விரைவில் களவு செய்து விடுவார்கள் என்றும், மீதமுள்ள இழப்பீட்டுத் தொகைக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் லாபத்தில் ஒரு பகுதியை நில உரிமையாளர்களுக்கு பங்காக தரலாம் எனவும், அப்போதுதான் நில உரிமையாளர்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு திட்டக்குழு உரிய சட்டத்தை கொண்டு வருவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதே நடைமுறையை பரனுர் விமான நிலைய திட்டத்திற்கும், நெய்வேலி நிலக்கரி கழகத்திற்கும் நிலம் கையகப்படுத்தும் போது செயல்படுத்தினால் நிலத்தை தரும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது..

Categories

Tech |