Categories
மாநில செய்திகள்

வண்டியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து முடிக்காத வண்டியூர் சுங்கச்சாவடியில் பணம் வசூலிக்க தடை விதித்து மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த இம்மானுவேல் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் “மதுரை உத்தங்குடியில் இருந்து கப்பலூர் வரையிலான சுற்றுச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சாலையில் தற்போது வண்டியூர், சிந்தாமணி, வளையங்குளம் ஆகிய 3 இடங்களில் டோல்கேட் மையம் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன.

மதுரை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மேலூர் சிட்டம்பட்டி, தூத்துக்குடி சாலையில் எலியார்பத்தி, திருமங்கலம் சாலையில் கப்பலூர் என 3 டோல்கேட் மையங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. தற்போது சென்னையில் இருந்து தென் மாவட்டம் செல்லும் வாகனம் மதுரை மாவட்டத்தில் மட்டும் சிட்டம்பட்டி, வண்டியூர், சிந்தாமணி, வளையங்குளம், கப்பலூர் என 5 டோல்கேட் மையங்களில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

மேலும் சுங்கச் சாவடியில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. ஆகவே அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வரை கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை நீதிமன்றம் அடிப்படை வசதிகளை, கட்டமைப்புகளை முறையாக முடிக்கும் வரை வண்டியூர் சுங்க கேட்டில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், அதற்கான கட்டணத்தை வேறு எந்த சுங்க கேட்டிலும் வசூலிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த உத்தரவு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

Categories

Tech |