கண்டக்டரை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் கவியரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒண்டிப்புதூரில் இருந்து சித்ரா செல்லும் அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இதே பேருந்தில் முருகவேல் என்பவர் ஓட்டுனராக இருக்கிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் அரசு பேருந்து வழக்கம் போல சித்ரா பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் ஒண்டிபுதூர் நோக்கி புறப்பட்டுள்ளது. பயணிகளை இறக்கி விட்ட பிறகு குடிபோதையில் பேருந்தில் ஏறிய 3 வாலிபர்கள் பேருந்தை சிங்காநல்லூர் நோக்கி இயக்குமாறு தெரிவித்துள்ளனர். அப்போது பேருந்து டெப்போவுக்கு செல்வதால் கீழே இறங்குங்கள் என அந்த வாலிபர்களிடம் கண்டக்டர் கூறியுள்ளார். அதனைப் பொருட்படுத்தாமல் வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தானியங்கி கதவை மூடிவிட்டு பேருந்தை காவல்நிலையத்திற்கு ஓட்டி செல்கிறேன், அங்கு வந்து பேசிக் கொள்ளுங்கள் என ஓட்டுனர் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்டக்டர் கவியரசை குத்தினர். அதன் பிறகு பேருந்தில் இருந்த அவசர வழியை உடைத்துவிட்டு வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து காயமடைந்த கண்டக்டரை ஓட்டுனர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் டெப்போவில் இருக்கும் அரசு பேருந்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பேருந்துகளை இயக்க மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 55 பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அஜித் சூர்யா ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன் பிறகே டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான மனோஜ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.