சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
இதனிடையே இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய இஸ்லாமிய பெருமக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டிய கடமை காவல் துறையினருக்கு இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.