Categories
மாநில செய்திகள்

வதந்திகளைப் பரப்புவோருக்கு டிஎன்பிஎஸ்சி கண்டனம்…!!

ஊடகங்களின் அடிப்படையில் வதந்திகளைப் பரப்புவோருக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேர்வாணையம் அண்மையில் முடிவுகள் வெளியிட்ட தொகுதி 2 தேர்வில் 1997ஆம் ஆண்டு பிறந்த தேர்வர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளது சந்தேகமளிக்கிறது என ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதுதொடர்பாக தேர்வாணையம் முழுவதுமாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் தவறேதும் நடைபெறவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்வாணையம் அறிவித்துள்ளது போல் அடுத்த வாரம் தொகுதி இரண்டுக்கான கலந்தாய்வு நிறைவடைந்து, தேர்வர்களின் முழு விவரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

அண்மையில் நடந்து முடிந்த பொறியாளர் பணிகளுக்கான தேர்வில், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 39 தேர்வர்களில் சென்னை மையத்திலிருந்து மட்டும் 31 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட தாகவும், எனவே அதில் தவறு நிகழ்ந்திருக்கலாம் எனவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளது. இதுதொடர்பாகவும் தேர்வாணையம் முழுமையாக ஆய்வு செய்ததில், மேற்குறிப்பிட்ட 31 தேர்வர்களும் மூன்று வெவ்வேறு தேர்வுக் கூடங்களில் 21 வெவ்வேறு அறைகளில் அமர்ந்து தேர்வு எழுதியுள்ளனர் என்பதும் தவறு ஏதும் நடைபெறவில்லை என்தும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கான கலந்தாய்வு இன்று நிறைவு பெற்றுள்ளதால் வெற்றிப்பெற்ற தேர்வர்களின் முழு விபரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இதுபோன்ற ஊடகங்களின் அடிப்படையிலான தவறான செய்திகள் நல்ல முறையில் தேர்வுக்கு தங்களை தயார் செய்து நேர்மையாக பங்கேற்கும் தேர்வர்களின் திறமையை குறைத்து கூறுவதாக அமைவது வருத்தத்திற்குரியது.

இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான வதந்திகளை பரப்புவோர் மீது தேர்வாணையம் தனது கண்டனத்தை பதிவு செய்கிறது. தகுந்த ஆதாரங்களுடன் பெறப்படும் புகார்கள் மீது தேர்வாணையம் எப்போதும் உடனடி குற்றவியல் நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்கும். இனிவரும் காலங்களில் தேர்வாணையத்தின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இருக்காது எனவே, ஊடகங்களின் அடிப்படையில் வரும் தவறான செய்திகளை நம்பவேண்டாம் என்று தேர்வாணையம் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |