திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டு வந்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோனிமலை புலக்கரை பகுதியில் விவசாயியான ரெங்கராஜ் (50) வசித்து வருகிறார். இவர் கன்னிவாடி வனப்பகுதிக்கு சென்று அங்குள்ள காட்டுப்பன்றிகளை தனது நாய் மூலம் வேட்டையாடி அதில் கிடைக்கும் இறைச்சியை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்பேரில் கன்னிவாடி வனவர் ரங்கநாதன், வனச்சரகர் சக்திவேல், வனகாப்பாளர் நாகராஜ் ஆகியோர் ரெங்கராஜ் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது அங்கு காட்டுப்பன்றியுடைய இறைச்சியை சமைத்து கொண்டிருந்த விவசாயி ரெங்கராஜனை காவல்துறையினர் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த காட்டுப்பன்றி இறைச்சியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட வன அலுவலர் திலீப், காட்டுப்பன்றியை வேட்டையாடிய ரெங்கராஜிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.