காட்டு யானை தாக்கியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெத்திக்குட்டை பிரிவு பவானிசாகர் அணை பகுதியில் ஆணின் சடலம் கிடப்பதை பார்த்த சில வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஓட்டுநரான நவீன்குமார் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நவீன்குமார் பவானிசாகர் அணையின் பின் பகுதிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை நவீன் குமாரை தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.