திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனப்பகுதியில் இருந்த சகதியில் சுற்றுலா வேன் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களில் இருந்து படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். இந்நிலையில் நகரின் பல்வேறு இடங்களில் பிற்பகல் 3 மணி முதல் சுமார் அரைமணிநேரம் மிதமான மழையும், வனப்பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களை மழையில் நடந்தபடியே பார்த்து ரசித்தனர்.
மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரியும் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கொடைக்கானல் வனப்பகுதியில் பாலம் கட்டுதல், சாலை அமைத்தல் ஆகிய பணிகள் நடக்கிறது. இந்நிலையில் ஒரு சுற்றுலா வேன் பைன் மரக்காடுகள் அருகே நடந்த பாலம் கட்டுமானப் பகுதியில் உள்ள சகதியில் சிக்கிக் கொண்டது. இதன் காரணமாக போக்குவரத்து சுமார் 2 மணி நேரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் பின் சுற்றுலா வேன் மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.