சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்வே துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் யானைகள் அதிக அளவில் கடந்து செல்லும் ரயில்வே தண்டவாளங்கள் கண்டறியப்பட்டு ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பது தவிர்க்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பின் ரயில்வே தண்டவாளங்களை யானைகள் கடந்து செல்வதற்கான சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணி ஓராண்டுக்குள் முடிவடையும். இதனையடுத்து நீதிபதிகள் வனப்பகுதிக்குள் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை காப்பிடப்பட்ட கம்பிகளாக மாற்ற வேண்டும் என்றனர்.
இதன் மூலம் யானைகள் மற்றும் பிற வன விலங்குகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதை தடுக்கலாம். இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து யானைகள் அதிக அளவில் நடமாடும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். யானைகள் வருவதை கண்டறிய தெர்மல் சென்சரை பயன்படுத்தி, ரயில் ஓட்டுனருக்கு தகவல் கொடுக்க வேண்டும். இந்தப் பணியை செய்வதற்கு ஒருவரை ரயில்வே நிர்வாகம் நியமிக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 29-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.