நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனப்பகுதியில் மின்சார வயர் அறுந்து கீழே விழுந்ததை மிதித்ததால் 1 ஆண் யானை, 4 காட்டுப்பன்றி, 2 கீரிப்பிள்ளை, 3 நல்லபாம்பு உள்ளிட்டவை உயிரிழந்ததாக பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த செய்தியை சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானே முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை செய்தது. அந்த விசாரணைக்கு பின்னர் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் கே. ராமகிருஷ்ணன் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த ஆணையின்படி, வனப்பகுதியில் உள்ள மின்சார வயர்கள் அறுந்து கீழே விழுந்தால் அவை தானாகவே மின்சாரம் தடைபடும் வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
அவ்வாறு செய்தால் தான் இது போன்ற சம்பவங்களிலிருந்து வனவிலங்குகளை பாதுகாக்க முடியும் என்று கூறினார். பூமிக்கு அடியில் மின்சார வயர்களை கொண்டு செல்ல வழிவகை செய்யவேண்டும். மேலும் இதை செயல்படுத்தும் போது, மின்சார வயர்கள் செல்லும் பகுதிகளை வனவிலங்குகள் கடக்கும் போதும், தானாகவே மின்சாரம் தடைபடும் வகையில் சென்சார் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களை பொருத்த வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார்.
தொடர்ந்து வனவிலங்குகள் உயிரிழப்புக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இவற்றிற்காக வனத்துறைக்கு இழப்பீடாக 75,00,000 வழங்க வேண்டும் என்று டான்ஜெட்கோவிற்கு உத்தரவிட்டு, அந்த தொகையை மின்சார தாக்குதலிருந்தும் மனிதர்கள் வேட்டையாடுவதிலிருந்தும் விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இது போன்ற அசம்பாவிதம் வரும் காலத்தில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அந்த உத்தரவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.