ஆதிதிராவிட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.
மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு பேசினார். அவர் வன்கொடுமையை தடுக்க எத்தனையோ முயற்சிகளை நாம் செய்து வருகிறோம். இருப்பினும் சில இடங்களில் வன்முறைகள் தலைதூக்கத்தான் செய்கிறது. இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை விட கூடுதல் தொகையானது வழங்கப்படவுள்ளது. அதாவது குறைந்த பட்சம் 1 லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சம் வரை இழப்பீடு தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வன்கொடுமை தொடர்பான சட்டங்களை இன்னும் 60 நாட்களுக்குள் முடிக்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை சமுதாய கண்ணோட்டத்துடன் அணுகி, அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தை ஆற்றும் விதமாக இழப்பீடு மற்றும் வளமான எதிர்காலம் ஆகியவற்றை வழங்குவதற்கான விழிப்புணர்வு பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். கல்வி சார்ந்த திட்டங்களுக்காக 3571 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆதிதிராவிட மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக விலையில்லா சீருடை, பல்வேறு கட்டணச் சலுகைகள், உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னை நந்தனம் பகுதியில் இருக்கும் எம்.சி ராஜா விடுதி வளாகத்திற்குள் ரூபாய் 40 கோடி செலவில் நவீன வசதிகள் கொண்ட மாணவர் விடுதி கட்டப்படும். அனைத்து துறைகளிலும் தொகுதி வாரியாக பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் ஆதிதிராவிட மக்களுக்கான அரசு பணி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும். இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் சமபந்தி போஜனம் என்பதை பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு சமபந்தி போஜனம் என்பதற்கு பதிலாக சமத்துவ விருந்து என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக அமைந்துள்ள திராவிட மாடல் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளை வாங்கித் தரும். அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அரசு துணை நிற்கும். இந்த கூட்டத்தில் உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த கருத்துக்களை அரசு பரிசீலனை செய்து நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என கூறினார்.