தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இது தொடர்பான அரசாணையை திமுக தலைமையிலான அரசு வெளியிட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சாதி ரீதியான கணக்கெடுப்பை சரியாக நடத்திய பிறகு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்து ஆணையிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக சி.ஆர் ராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கிற்கு நேற்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் 10.5% இட ஒதுக்கீட்டால் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு சட்டம் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. மேலும் அரசியலமைப்பின் சட்டத்திற்கு உட்பட்டு வன்னியர் இட ஒதுக்கீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.