10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு தந்து சட்டம் இயற்றப்பட்டு இருந்தது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசும் வெளியிட்டிருந்தது.. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது..
இதனை தொடர்ந்து இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஸ்வரராவ் பி.ஆர் கவாய் அமர்வு முன் மேல் முறையீடு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என்று கூறிய நீதிபதிகள் ஐகோர்ட் கிளை தீர்ப்பை உறுதி செய்து தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர்..
இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்திய படி மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. அதிமுக ஆட்சியில் தேர்தல் நேரத்தில் அவசர கோலத்தில் 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதே ரத்துக்கு காரணம் என்றார்..
மேலும் அவர், சரியான அடிப்படைத் தரவுகள் இன்றி சட்டத்தை கொண்டு வந்ததால் தான் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எந்த ஒரு பிரிவினருக்கும் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என்பதை நீதிமன்றம் ஏற்றுள்ளது. ஒதுக்கீட்டிற்கான தரவுகள் சரியாக இல்லை, சரியான ஆதாரங்கள் இன்றி ஆணைய பரிந்துரைகளும் இருந்துள்ளன.
அடுத்த கட்ட ஆலோசனை நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக கலந்தாலோசித்து அரசு முடிவு எடுக்கும். வன்னியர்களுக்கான 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.