மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர்.
ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது. வன்முறையாளர்கள் கடைகள், வீடுகளுக்கு தீ வைத்தும், கல், செங்கல், பாட்டில்களை வீசியும் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது
இந்தக் கலவரத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை டெல்லி போலீஸார் 48 முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்துள்ளனர். இதில் 41 வழக்குகள் கலவரத்தைத் தூண்டியதாகவும், 4 கொலை வழக்குகளும், 3 கொலை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக 7 ஆயிரம் துணை ராணுவப்படையினர் டெல்லி வடகிழக்குப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டெல்லி வடகிழக்குப் பகுதியில் மெல்ல அமைதி திரும்பி மக்கள் இயல்பு நிலையை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
டெல்லி மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் இன்று காலை முதல் வடகிழக்குப் பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகரின் முக்கிய பகுதியில் சில கடைகள் மட்டுமே திறந்துள்ளன. சில இடங்களில் மட்டும் ஆட்டோக்களும், இ-ரிக்ஷாகளும் ஓடத் தொடங்கியுள்ளன. மக்களும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து பணிக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.