8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 3 பேர் சேர்ந்து 8 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்து வடமதுரை பகுதியில் 8ஆம் வகுப்பு மாணவி பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக அந்த சிறுமி வீட்டில் இருந்து படித்து வந்துள்ளார். அப்போது சிறுமியின் பெற்றோர் இருவரும் பகலில் வேலைக்கு சென்று விடுவார்கள். இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த 37 வயது தங்கவேல் அச்சிறுமிக்கு தின்பண்டங்களை வாங்கி கொடுத்து ஆசை வார்த்தைகள் கூறி அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை மறுத்த அந்த சிறுமியை மிரட்டி மேலும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுமி அடிக்கடி தங்கவேலு உடன் சென்று வருவதை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த 65 வயதான பெருமாள் என்பவரும், 70 வயதான குருநாதர் என்பவரும் தங்கவேலுவிடம் கேட்டு இதை பற்றி அறிந்து அவர்களும் கூட்டு சேர்ந்தனர். இதையடுத்து அவர்கள் மூவரும் சேர்ந்து அச்சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் 8 மாதங்களாக தொடர்ந்துள்ளது. இந்நிலையில் இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அச்சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் 8 மாதங்களாக இவர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்த காவல்துறை ஆய்வாளர் தென்றல், தங்கவேலு, பெருமாள் மற்றும் குருநாதன் இவர்கள் மூவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.