பணம் பறிக்க முயற்சி செய்ததை தட்டி கேட்ட வாலிபருக்கு கத்தி குத்து விழுந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வயலங்கரை பகுதியில் டிப்-டாப்பாக உடையணிந்து ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் வயதான தம்பதியிடம் வங்கியில் இருந்து கடன் பெற்று கொடுப்பதாக கூறியுள்ளார். அதற்கு வைப்பு தொகை தர வேண்டும் என அந்த நபர் தெரிவித்துள்ளார். இதனை பார்த்ததும் அதே பகுதியில் வசிக்கும் ஜோயல் சிங், ரசல் ராஜ் ஆகியோர் எதற்காக பணம் கேட்கிறீர்கள் என விசாரித்துள்ளனர். அப்போது அந்த நபர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷிபு என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து பொதுமக்கள் உஷாரானதை அறிந்த ஷிபு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார். பொதுமக்கள் அவரை துரத்தி சென்றுள்ளனர். அப்போது அரசுமூடு பகுதியில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் கீழே விழுந்த ஷிபுவை ஜோயல் சிங் பிடிக்க முயன்றுள்ளார். இதனால் கோபமடைந்த ஷிபு ஜோயல் சிங்கை கத்தியால் குத்தியதோடு, மற்றவர்களை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஷிபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.