உல்லாசமாக இருக்கலாம் என கூறி வாலிபரை அழைத்து சென்று பணத்தை பறித்த 3 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா அருகே உள்ள ரெட்டியார் தெருவில் வசந்த் (22) என்ற வாலிபர் வசித்து வருகிறார். சரக்கு ஆட்டோ ஓட்டி வரும் இவர் கடந்த 7-ம் தேதி நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் நாமக்கல் மணிக்கூண்டு அருகே உள்ள மருந்து கடையில் நின்று கொண்டிருந்தபோது 2 திருநங்கைகள் வசந்திடம் சென்று உல்லாசமாக இருக்கலாம் என கூறி இருச்சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து ஏ.எஸ்.பேட்டை பொய்யேரி சாலையில் வசந்தை இறக்கிவிட்ட திருநங்கைகள் அவரை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வசந்த் இதுகுறித்து நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருநங்கைகளை தேடிவந்தனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வாலிபரிடம் இருந்து பணத்தை பறித்து சென்ற திருநங்கைகள் ஏ.எஸ்.பேட்டை அர்ச்சனா (29), சேந்தமங்கலத்தை சேர்ந்த லோகேஸ்வரி (26) மற்றும் ரித்திகா (25) என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் 3 பேரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்த 40 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.