கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ வயல்வெளியில் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியான நிலையில் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மாயம்பாடி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது சரக்கு ஆட்டோவில் உறவினர்களை ஏற்றிக்கொண்டு சின்னபக்களம் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நெய்வாசல் அருகே உள்ள வளைவில் திரும்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த வசந்தா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜாத்தி, பார்வதி, சரோஜா உள்பட 8 பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.