அரியலூர் மாவட்டத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மீது மின்னல் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பலிங்கானத்தன் என்ற கிராமத்தில் 63 வயதுடைய தங்க பாண்டியன் என்பவர் வசித்துவருகிறார். விவசாயம் செய்து வரும் அவர், நேற்று மாலை தனது வயலில் சம்பா நெல் சாகுபடிக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தங்கபாண்டியன் மீது திடீரென மின்னல் தாக்கி உள்ளது.
அதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.