கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் வயலுக்குள் பாய்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் எருமைகுட்டை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறிகளை வேனில் ஏற்றிக்கொண்டு கரட்டடிபாளையம் பகுதியில் செயல்படும் வார சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக மணிகண்டன் வாகனத்தை திருப்பியுள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையோரம் 10 அடி ஆழத்திலிருந்த வயலுக்குள் பாய்ந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் உடனடியாக வேனுக்குள் இருந்த மணிகண்டனை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு வேன் மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.