திருச்சி மன்னார்புரத்தில் உள்ள சிறப்பு முகாமில் 15க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஈழத்தமிழர்களும், வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று மொத்தம் 100 பேருக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தண்டனை காலம் முடிந்தும் தங்களை மேலும் சிறையில் அடைத்து வைத்துள்ளதாக கூறி கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்த போலீசார் கடந்த வாரம் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் பல போராட்டங்களை செய்தும் பலன் அளிக்காததால் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திக்சன் என்பவர் கழுத்தை அறுத்தும், ரமணன் என்பர் வயிற்று பகுதியை அறுத்தும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.