கர்ப்பமாக இருந்த சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கண்டகபைல் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான முத்து(22) என்ற மகன் இருக்கிறார். கடந்த சில மாதங்களாக முத்துவும் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து விசாரித்த போது குழந்தை திருமணம் நடந்ததும், கர்ப்பமானதும் டாக்டர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் முத்து, குழந்தை திருமணம் செய்து வைத்த சிறுமியின் மாமனார் சுரேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இதற்கிடையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த ஆறு மாத குழந்தையும் உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.