அரூர் அருகே பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாயும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பிள்ளைக்கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னராஜ் என்பவருடைய மகள் செல்வி (30) . இவரது கணவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு நிஷிதா(5) என்ற மகளும், சென்னகேசவன் என்ற 5 மாத ஆண் குழந்தையும் இருந்தது . செல்வி தனது இரு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே செல்வி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். ஆனால் செல்விக்கு வயிற்றுவலி குணமாகவில்லை .இதனால் வாழ்க்கை மீது வெறுப்படைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் இறந்த பிறகு தனது குழந்தைகளை யார் கவனிப்பார்கள்? என்று கவலைப்பட்டு குழந்தைகளையும் கொல்ல முடிவு செய்தார் .
இந்நிலையில் நேற்று தங்களுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குழந்தைகளை வீசி விட்டு செல்வியும் கிணற்றில் குதித்தார். இந்த சத்தம் கேட்டு அருகிலிருந்த மக்கள் ஓடி வந்து கிணற்றில் தத்தளித்துக்கொண்டிருந்த செல்வியை மீட்டனர். ஆனால் அவர்களால் குழந்தைகளை மீட்க இயலவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி குழந்தைகளை தேடினர். மின் மோட்டார் மூலம் கிணற்றிலிருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட பின் சிறுமி நிஷிதா மற்றும் சென்னகேசவன் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதையடுத்து 2 குழந்தைகளின் உடலும் அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.