வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக பெண்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று மலையாள நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்து திருமணமான மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.அடுத்தடுத்து இளம்பெண்கள், தங்களது கணவரின் வீட்டில் உயிரிழந்த சம்பவங்களைத் தொடர்ந்து, வரதட்சணைத் தொடர்பான புகாரளிக்க, 24மணி நேர ஹெல்ப்லைன் எண்ணை, முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். அறிவித்த சில மணி நேரங்களிலேயே நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்து வருகின்றன.
பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக வேதனை தெரிவித்துள்ள பினராயி விஜயன், மனைவியை அடிப்பது ஆண்மை என்றும், மன்னிப்பதும், சகித்துக்கொள்வதும் பெண்மையின் அடையாளம் என்றும் நினைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இது போன்ற தவறான கருத்துகளை நம் குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது என வேண்டுகோள் வைத்துள்ள அவர், பாலின ஏற்றத்தாழ்வுகளுக்கு இடம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து மோகன்லால் அவர்கள் டிவிட்டர் பக்கத்தில் இயக்குனர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாக இருக்கும் ஆராட்டு என்ற படத்திலுள்ள ஒரு பாகத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் அவர் அன்பின் அடிப்படையில் நடைபெறுவது தான் திருமணம் என்று கூறியுள்ளார். மேலும் வரதட்சணைக்கு எதிராக நில்லுங்கள் என்றும், பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும் வரை போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்