குடும்ப பிரச்சினையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரல்விளை பகுதியில் டெம்போ ஓட்டுனரான சுனில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அஜிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அஜிதாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அஜிதாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்துள்ளார். மேலும் அஜிதாவின் தந்தையான பால்ராஜ் தனது மகளை வரதட்சனை கேட்டு சுனில் ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சுனில் ராஜ், அவரது தாயார் சுசீலா ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.