ஆடி பவுர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் வரலட்சுமி விரதம் ஆகும். அந்த வகையில் இன்று வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. 16 வகையான செல்வங்களையும் வழங்கக்கூடிய மகாலட்சுமி தேவியை நினைத்து விரதம் இருப்பது மகாலட்சுமி வரலட்சுமி விரதம். சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இந்த முறை ஆவணி தொடங்கிய பின் வரக்கூடிய பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. காலை 9:15 முதல் 10.15 வரையிலும், மாலை 4 முதல் 5.45 வரை நல்ல நேரமாக இருக்கிறது.
இந்த நேரத்தில் பூஜை செய்ய நல்ல நேரம். அல்லது அந்தி சாயும் நேரத்தில் பூஜை செய்வது நல்லது. இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் 16 வகையான செல்வங்களையும் பெற்று விடலாம் என்பது ஐதீகம். திருமண வயதை அடைந்தவர்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை அமையும். சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் தன் கணவருடைய ஆயுள் அதிகரிக்கும். கணவருக்கு சிறந்த வேலை, தொழில் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.
விரதம் கடைபிடிக்கும் முறை: வீட்டில் சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் அம்மன் முகம் எழுப்பவேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைத்து வணங்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைத்து பின் சிலையின் முன்பு ஒரு வாழை இலை போட்டு ஒரு படி பச்சரிசியை பரப்பி மாவிலை தேங்காய், எலுமிச்சை, பொன், பழங்கள் வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். வரலட்சுமி விரத பூஜைக்கு வீட்டிற்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, தேங்காய், குங்குமம் கொடுக்க வேண்டும். நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம்.