இ.பி.எஸ்-ஐ கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து ஓ.பி.எஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் இ.பி.எஸ் விழுப்புரம் மாவட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் வீட்டு காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார். அப்போது பேசிய இ.பி.எஸ், அ.தி.மு.க கட்சியானது பல்வேறு சோதனைகளை கடந்து வந்திருக்கிறது. அதன் பிறகு நம்முடன் எட்டப்பனாக இருந்தவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது.
இந்த எட்டப்பர்கள் நம்முடன் இருந்து சூழ்ச்சி செய்ததால் தான் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.கவால் வெற்றி பெற முடியாமல் போனது. இதனையடுத்து எட்டப்பர்களை வைத்து ஸ்டாலின் நம்மை வீழ்த்த நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது என்று கூறினார். இதன் காரணமாக இ.பி.எஸ்-க்கு தமிழ்நாடு சில்லவார் ராஜகம்பள நாயக்கர் சமுதாய நலச்சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் நற்கலை கோட்டை ஆண்டிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் நடக்கும் பதவி சண்டையில் ஓ.பி.எஸ்-ஐ விமர்சனம் செய்வதற்காக எட்டப்பன் பரம்பரை என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்தியுள்ளார்.
அவர் வரலாறு தெரியாமல் எட்டயபுரம் மன்னர்களை பற்றி தவறாக பேசி விட்டார். அதன்பிறகு ஆங்கிலேயர் காலத்தில் நடைபெற்ற பிரச்சனை மற்றும் திரைப்படத்தில் வெளிவந்த வசனங்கள் மூலமாக எட்டயபுரம் மன்னர்களை துரோகத்தின் அடையாளமாக காட்டுவதை வன்மையாக கண்டிக்கிறோம். நாங்கள் 26 கிராமங்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எட்டயபுரம் மன்னர்களின் வம்சாவளியினராக வாழ்ந்து வருகிறோம். எங்கள் மன்னர்கள் கலை, இலக்கியம் போன்ற பல்வேறு கலைகளை ஆதரித்ததோடு, புலவர்களையும் ஆதரித்துள்ளார்கள். எனவே எங்களுடைய வரலாறு தெரியாமல் எங்கள் மன்னரையும் எங்களையும் இ.பி.எஸ் அவதூறாக பேசியதற்காக கடும் கண்டனம் தெரிவிப்பதோடு மாபெரும் போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் கூறியுள்ளார்.