அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியில் சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் ரஷ்யா உள்ளது. அமெரிக்கா ரஷ்யாவிடம் தினசரி 7 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்கிறது.
இந்நிலையில் அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளதால் ரஷ்யாவின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தடையில் எண்ணெய் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட எரிசக்தியும் அடங்கும். வரலாற்றிலேயே மிக முக்கியமான பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ளதால் உலக அளவில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் 10%க்கும் குறைவாகவே உள்ளது. இதனால் இந்த பற்றாக்குறையை அமெரிக்காவில் சரி செய்ய முடியும் என்று அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தடைக்கு முன்பே போர் காரணமாக அமெரிக்காவில் எண்ணெய் விலை 30% உயர்ந்துள்ளது. தற்போதைய தடையால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. ஆனால் இது தற்காலிகமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.