ஜூலை 11ஆம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதியின் உத்தரவு ரத்து எனவும் சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த சூழலில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை மன மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சட்டவிதிகளின்படி 11/7/2022 அன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் செல்லும் என வரலாற்று சிறப்புமிக்க சென்னை ஐகோர்டின் தீர்ப்பினை ஒன்றரை கோடி கழகத் தொண்டர்கள் சார்பாக வரவேற்கின்றேன். உண்மை உறங்கும் நேரம் பொய்மை இறக்கைகட்டி வாய் வேகத்தில் உலா வரும் என கூறுவார்கள். நம்மையெல்லாம் ஆளாக்கிய கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நம்மையெல்லாம் வாழவைத்த இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா போன்றோர் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களையும் தீய சக்தி பிரியா திமுக அரசின் அராஜகத்தில் இருந்து தமிழக மக்களையும் காக்கும் அறப்போரில் முழு மனதோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இந்த அரும் பணிகளுக்கு தடையாக உடன் இருந்தே கொள்ளும் வியாதிகளாக நமது இயக்கத்தால் வாழ்வு பெற்ற ஒரு சில சுயநலவாதிகள் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களின் கேடு மிதிகளை முறியடிக்க தூய்மையான மனதுடன் நீதி நேர்மை நியாயத்தை நம்பி கழகத் தொண்டர்களின் முழு ஆதரவுடன் போராடி வருகின்றோம். இன்றைய தினம் தர்மம் நீதி வென்றிருக்கின்றது. 23.6.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழு கூட்டம் செல்லும் எனவும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் எனவும் 11/7/2022 அன்று கழக சட்ட விதிகளின்படி நடைபெற்ற சிறப்பு கழகப் பொதுக்குழு கூட்டம் செல்லும் எனவும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் அறிவிப்புகளும் முடிவுகளும் செல்லும் என மாண்புமிகு சென்னை ஐகோர்டின் டிவிசன் பெஞ்ச் இன்று வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். மேலும் இந்த சட்ட போராட்டத்தில் என்னோடு துணை நிற்கின்ற தலைமை கழகம் நிர்வாகிகள் மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற சட்ட உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற சட்ட உறுப்பினர்கள் அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சட்ட வல்லுநர்கள் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கோடிக்கணக்கான கழகத்தின் அடிப்படை தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை கூறிக் கொள்கிறேன் என அதில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.