தந்தையின் மடியிலேயே 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்டில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் பிடி பாண்டே மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு உடல்நலம் சரியில்லாத 4 வயது குழந்தையை பெற்றோர் தூக்கிச் சென்றுள்ளனர். அந்த குழந்தைக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவசர சிகிச்சை வார்டுக்குள் அனுமதி தர மறுத்ததோடு புற நோயாளிகள் பிரிவில் சென்று காத்திருக்குமாறு கூறியுள்ளனர். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் அதற்குள் குழந்தை தந்தையின் மடியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது.
குழந்தையின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர் மருத்துவமனையில் கதறி அழுதனர். இந்நிலையில் குழந்தைக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்ட சமயத்தில் அவசர சிகிச்சை பிரிவு சார்பில் மருத்துவர் அனுமதிக்காததும் போதிய அளவு மருத்துவர் இல்லாததுதான் குழந்தையின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.