லாலாப்பேட்டை வாரச்சந்தையில் வரி வசூலிக்க வந்த அதிகாரிகளிடம் வியாபாரிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் புதன்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறும். அதை போன்று நேற்று வாரச்சந்தை நடந்தது. இந்த நிலையில் சந்தையின் டெண்டர் காலம் முடிந்ததால் இந்த வருடத்திற்கு டெண்டர் எடுக்க யாருமே முன்வருவதில்லை. நேற்று சுங்க வரி வசூலிப்பதற்காக கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் பணம் வசூலிப்பதற்கு எந்த ரசீதும் கொண்டு வரவில்லை. இதனால் கோபமடைந்த வியாபாரிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு திடீரென வாக்குவாதம் செய்தார்கள். இத்தகவல் அறிந்த லாலாபேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது வியாபாரிகள் எந்த அடிப்படை வசதியும் செய்யாமல் வரி வசூல் செய்யக்கூடாது என்று வியாபாரிகள் கூறினார்கள். அதன்பிறகு அதிகாரிகள் பணத்தை வசூல் செய்யாமல் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்கள்.