திருச்சி மாவட்டம் தீரன் நகர் பூண்டிமாதாநகர் 3வது குறுக்கு வீதியில் வசித்து வருபவர் முஷாக் ஷெரிப் (52). இவர் திருச்சி பெரியமிளகு பாறை பகுதியில் வரி ஆலோசகர் அலுவலகம் நடத்தி வருகிறார். திருச்சி- திண்டுக்கல் மெயின் ரோட்டில் பொன்னகர் பகுதியிலுள்ள பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் என்ற தனியார் வங்கியில் முஷாக் ஷெரிப் சேமிப்பு கணக்கு வைத்து இருந்தார். அந்த வங்கியில் மணப்பாறை வைகை குளம் வடக்கு லட்சுமிபுரம் பகுதியை சோ்ந்த மாரிமுத்துவின் மகன் லட்சுமி காந்த் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
சென்ற வருடம் அக்டோபர் மாதம் முஷாக் க்ஷெரிப்பை தொடர்புகொண்ட லட்சுமிகாந்த், “எங்கள் வங்கியில் பெரும்பாலான தங்கநகைகள் ஏலத்துக்கு வருகிறது. அதை நீங்கள் ஏலம் எடுத்து விற்றால், உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்” என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய அவர், ரூபாய்.62½ லட்சத்தை பல்வேறு தவணைகளில் லட்சுமி காந்திடம் கொடுத்துள்ளார். ஆனால் வெகுநாட்கள் ஆகியும் அவர் பணத்தையோ, நகைகளையோ திருப்பி கொடுக்கவில்லை.
இது தொடர்பாக கேட்டபோது அவர் சரிவர பதில் கூறவில்லை. இதன் காரணமாகதான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த முஷாக் ஷெரிப், இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி லட்சுமி காந்த் மீது ஏமாற்றி மோசடி செய்த பிரிவின் கீழ் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.