கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்தசோதனைக்கு பிறகு, 2007- 08, 2008-09 நிதியாண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் செலுத்த வேண்டும் எனவும் வருமான வரித்துறை கூறியது. இதனை எதிர்த்து சூர்யா தரப்பில் தீர்ப்பாயத்தில் சூர்யா தாக்கல் செய்த முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சூர்யா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வருமான வரி நிர்ணயம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை மேல்முறையீடு தீர்ப்பாயம் 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு செய்தால், அதற்கான வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தராததால் வட்டி விலக்கு பெற உரிமையில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்எம் சுப்ரமணியன் சூர்யா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.